செவ்வாய், 9 டிசம்பர், 2008

பகுத்து அறிவு



பல்லி சொல்லியது
பலன் கை மேலாம்
பயணத்திற்கு தயாரானான் !

படியை தாண்டுகையில்
பல்லி விழுந்தது !
பலன் - மரணம்
பஞ்சாங்கத்திலிருந்தது !

பயணம் இரத்து !

அக்கினி!


ஆக்க
உதவும் சிலவேளை

அழித்தும்
விடும்


அக்கினி
!

சனி, 6 டிசம்பர், 2008

அஞ்சனம்



ஆயிரம் சோகங்கள்
ஆழ் மனதினுள் - ஆனால்
அழ முடியவில்லை.

அழுதால்.....
அழிந்து விடுமே - என்
அஞ்சனம்.

வியாழன், 13 மார்ச், 2008

பெண் சக்தி

புன்னகை சிந்தும்
பெண் நான்.

ஆனால்...

பெண் சக்தி
பெரும் சக்தி.

ஆகவே
புயலாய் மாறும் வரை
தென்றல் நான்!

புதன், 12 மார்ச், 2008

எனக்கும் உயிருண்டு...

மலர் அல்ல
மங்கை நான் !

உணர்ச்சிகள் ஊற்றெடுக்கும்
உள்ளம் உண்டு.

கல்லாக்கி விட்டாய் !
கண்ணீரில் கரைகிறேன்.

மௌனம் பேசும் ஊமையாக்கி
மனதை ரணமாக்கும்

பூவுலகே! இதை என்று - நீ
புரிந்து கொள்வாய் ?

வருவாயா தோழி?


உறவுகளைத் தேடினேன்.... என்
உயிராய் நீ வந்தாய் !!

நெருக்கமாய் திரிந்ததில்லை - ஆனால்
நெஞ்சமெல்லாம் நீ நிறைந்தாய் !

சொந்தங்கள் பல தந்தவள் நீ !
சொர்க்கத்தை காட்டியவளும் நீ !

வெளிச்சத்தில் நான் வாழ
விளக்காய் இருந்தவளே !

விடியும் வேளையில் - இந்த
விலகல் ஏனடி?

வேதனை தந்த பின்
வேஷங்கள் எதற்காக?

உலகிற்காய் நடிக்கிறோமா? - என்
உள்ளத்தில் பல வினாக்கள் !!

குழப்பங்கள் என் மனதில் - அதை
கொட்டி விட நினைக்கிறேனடி.

ஆசைகள் நிராசைகளான
ஆயிரம் சமாதிகள் என் மனதில் !

பிரியாத உறவென நினைத்த - நம் நட்பு
புரியாத உறவாய் தொடருதடி !

இணையாத பிரியாத தண்டவாளமாய் - நம்
இதயங்கள் பயணிக்குதடி !!

விதி இதுதான் என்றெண்ணி
விலகி விட முடியவில்லை...

மதியால் வென்று உனை சேர
மார்க்கமேதும் தெரியவில்லை...

தவிக்கிறேனடி - என் உயிர் தோழி
தப்பிக்க வைக்க வருவாயா ?

என்னம்மா நியாயம் இது?


விதி தந்தது
வெள்ளைப் புடவை - இனி
வெளிச்சம் கிடையாது!

சகுனம் சரியில்லை - நல்ல
சந்தர்ப்பங்களில் வந்தால் !


நீ மட்டும்
நித்தமும் வெள்ளையுடன்
சபை நடுவே வருகிறாயே !

விலக்கப்பட்டவள் நான் !
விக்கிரகம் நீ !

அருள் பாலிக்க நீ!
அறையுள் நான் !
என்னம்மா நியாயம் இது
என் சரஸ்வதி தாயே!

திங்கள், 10 மார்ச், 2008

அன்புத் தோழியே!


இதயம் துடிக்கும் வரை மறவாது

அந்த

இனிமையான பொழுதுகள்

பாலைவனமாய் விரிகின்ற நினைவில் - தெரியுது

பசுமையான அந்தக் காலங்கள்

அரை நொடியில் முடிந்த கனவாய்

அத்தனையும் மறைந்த பின்னும்

மனத்திரையில் எட்டிப் பார்க்கும் - அவை

மகிழ்வான சுவடுகளே!


கடைசி வரை மறவாது - அந்த

கல்லூரி ஞாபங்கள்.


ஆனால்......

கசக்குதடி அனைத்தும் - நீதான்

கண்ணீரை தந்துவிட்டாயே!



பிரிவொன்று நேர்ந்தாலும் - நாம்

பிணைந்திருப்போம் இதயத்தால்

நேற்று வரை கனவு கண்டேன். - நீதான்

காற்றாய் மறைந்து விட்டாயே!


புரியாத புதிர் நீயடி!!!

உன்னாலே......


சிட்டாக பறக்க

சிறகு இல்லை - ஏங்குது

மனம் மகிழ்ச்சியில் !

இல்லாத போது....


நிலவிருக்கும் வரை

அதில்எனக்கோர் வெறுப்பு - அது

தேயத் தொடங்கியதும் வந்தது

அதன் மேலொரு விருப்பு

அமாவாசை வந்த பின் புரிந்தது

நிலவில் எனக்குள்ள பிடிப்பு

பௌர்ணமி வரும் வரை

தொடரும் என் காத்திருப்பு.

காதலித்துப் பார்


மனதினைத் தொலைத்துப் பார்

மலையின் உயரம் தெரியும்.

இதயத்தை இடமாற்றிப் பார்

இரயிலின் வேகம் புரியும்.


காதலித்துப் பார்


கடலின் ஆழமும் புரியும்!!

எதிர் கொள் - பெண்ணே




பெண்ணே!

எத்தனை காலம்

இருளில் வாழ்வாய்?

துக்கம் கொண்டு

தூங்கியது போதும்!

விழித்துக் கொள்!

விடியலை தேடு!

தீயைக் கூட

தீர்த்துக் கட்டும் - நீரின்

தண்மையே இயல்பான

மென்மை நீ பெண்ணே!

கத்தி வேண்டாம்!

கண்ணீரும் வேண்டாம்!

மனிதனை மதித்து - அதை

மறந்தவனை மிதித்து

எதிர்காலத்தை - நீ

எதிர் கொள்!