சனி, 9 மே, 2009

கிளியோபட்ரா அழகியா?


2039
வருடங்களின் பின்
னர் வந்த சந்தேகத்தால்

கல்லறையைத்
தேடும் ஆராச்சியாளர்கள்






"காதல் அழகினை அடிப்படையாகக் கொண்டு தோன்றுவதில்லை. இலக்கியங்களும் இன்றைய திரைப்படங்களும்தான் காதலி அழகை முதன்மைப்படுத்திக் காட்டியுள்ளதுடன் காதலுக்கு புறவழகுதான் முக்கியம் என்பது போல் போன்றதொரு மாயையையும் ஏற்படுத்தியுள்ளன." என்றொரு குற்றச்சாட்டை முன்வைக்கும் தர்க்கத்தை உலக வரலாற்றிலே உயர்வான காதலர்களாகவும், அழகான ஜோடியாகவும் நம்பப்படும் கிளியோபட்ரா - மார்க் அண்டனி ஜோடி ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள் இறந்து 2039 வருடங்கள் கடந்து விட்டனவே! என்று ஆச்சரியப்படுகிறீர்களா? உடல்கள் மட்டுமே மீளாத்துயிலில் ஆழ்ந்து விட்டன. ஆனால், அவர்கள் வரலாற்றில் நிலைத்து வாழ்கிறார்கள். மீளாத்துயிலில் மண்ணுக்குள் உறங்கி விட்ட உடல்களைக் கூட வெளிக் கொண்டு வர ராச்சியாளர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள்.

கிளியோபட்ரா - மார்க் அண்டனி காதல் ஜோடி பற்றி வரலாறு மற்றும் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள சில விடயங்கள் இன்னமும் சர்ச்சைக்கு உரியதாகவே இருக்கின்றன. நவீன காலத்து மக்களாகிய நாம் கண்களால் காண்பதை மட்டுமே நம்புபவர்கள் என்ற நம்பிக்கையில் இந்த சர்ச்சைகளுக்கு விடை காணும் முகமாகவே மண்ணுள் புதையுண்ட காதலர்களைத் தேடுகின்றனர்.

இந்தக் காதலர்கள் நம்மால் நம்பப்படுவது போலவும் இலக்கிய வரலாறுகள் கூறுவது போலவும் அழகானவர்களா? ஆழ்ந்த அன்பு கொண்டவர்களா? இவர்கள் உடல்கள் ஒன்றாகப் புதைக்கப்பட்டதா? என்ற பல கேள்விகள் இந்த ஆய்வின் பின்னணியில் உள்ளன.

எனவே , இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கூடியது என நம்பப்படுகின்ற கிளியோபாட்ரா - மார்க் அண்டனியின் சமாதியைத் தேடும் பணிகள் எகிப்தின் மேற்கு அலெக்சாண்றியா மலைப்பகுதியில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. மேலும் அப்பகுதியில் ஏற்கனவே இடம்பெற்றுவரும் அகழ்வாராச்சிகளின் போது கண்டெடுக்கப்பட்ட மம்மிகள், கிளியோபாட்ரா - மார்க் அண்டனியின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் மற்றும் மார்க் அண்டனியினது எனக் கருதப்படும் முகமூடி என்பன அவர்கள் சமாதி மிக அருகிலேயே இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.

உலக வரலாற்றில் வல்லமை மிக்கவர்களாகக் கூறப்படும் ஜூலியஸ் சீசர் மற்றும் மார்க் அண்டனி ஆகிய இரு மாவீரர்களின் காதலியா இருந்த கிளியோபாட்ரா வாழ்ந்ததோ வெறும் 39 வருடங்களே. ஆனால் 2039 வருடங்களின் பின்னரும் நினைவு கூரப்படும் வகையில் தன் பெயரை நிலைநாட்டிச் சாதனை படைத்துள்ளார்.

இந்த மாவீர்களின் காதலி பேரழகியாகவே சித்தரிக்கப்பட்டுள்ளார். மேலும் கிளியோபாட்ரா, மார்க் அண்டனி ஜோடியை பேரழகு மிக்க ஜோடியாக ஹோலிவூட் நம்மை நம்ப வைத்துள்ளது. கிளியோபாட்ரா, மார்க் அண்டனி என்று நினைத்தாலே எலிசபெத் டெய்லர், ரிச்சட் புரூட்டன் ஆகிய இருவரினதும் அழகான உருவங்களே கற்பனைத் திரையில் தோன்றுகின்றன. ஹோலிவூட்டில் கிளியோபாட்ராவாக நடித்த எலிசபெத் டெய்லரும், மார்க் அண்டனியாக நடித்த ரிச்சட் புரூட்டனும் இந்த மாயையை நம்முள் விதைத்து விட்டனர்.

ஆனால் அகழ்வுகளில் கிடைக்கப் பெற்ற கிளியோபாட்ரா மற்றும் மார்க் அண்டனியின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்களே இப்பொழுது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் வரலாற்று இலக்கியங்கள் இந்த ஜோடியை மிகைப்படுத்தி அழகாகக் காட்டியுள்ளன என்ற வாதமும் முன் வைக்கப்பட்டுள்ளது.

நாணயங்களைப் பார்க்கும் போது கிளியோபாட்ரா, மார்க் அண்டனி ஜோடியினருக்கும் எலிசபெத், ரிச்சட் புரூட்டனுக்கும் தூரம் அதிகம். ஒப்பிட்டுக் கூட பார்க்க முடியாது. ஆனால் கிளியோபாட்ராவில் ஏதோ ஒரு வித கவர்ச்சி இருந்திருக்கலாம். ரோமானிய எழுத்தாளர்கள் கூறுவது போல புத்திசாலியாகவும் இனிமையான குரலை உடையவளாகவும் இருந்ததால் ஏற்பட்ட கவர்ச்சி அவளை அழகியாக மிகைப்படுத்திக் கூறக் காரணமாக இருந்திருக்கலாம் என்கின்றனர்.

இந்த நிலையில், ஷேக்ஸ்பியருக்கு கிளியோபாட்ரா எப்படி இருந்தாள் என்பது முக்கியமல்ல. கி.பி 1564 இல் பிறந்த அவருக்கு கி;மு 30 ஆம் ஆண்டில் இறந்த கிளியோபாட்ரா எப்படி இருந்தாள் என்பது தெரியாது. தன் நாடகத்தின காதாபாத்திரமாக அவளைக் கற்பனையிலேயே உருவாக்கியுள்ளார். எனவே ஷேக்ஸ்பியரின் கிளியோபாட்ராவை முன் வைத்து அவள் அழகி என்பதை நிலை நாட்ட முடியாது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டுள்ளது.

அப்படியானால் அவள் அழகை நிரூபிக்க அகழ்வாராச்சி மட்டும்தான் ஒரே வழியா? அப்படியும் கூற முடியாது. ஏனெனில் அகழ்ந்தெடுக்கப்படும் கிளியோபாட்ராவின் உடல் இப்பொழுது வெறும் எலும்புத் தொகுதியாகவே இருக்கும். அதிலிருந்து அவளின் மூக்கு எலிசபெத் டெய்லரது மூக்குப் போல நீளமானதா என்பதை ஊகிக்க முடியாது. அந்தக் கூட்டில் மூக்கின் குருத்தெலும்போ கட்டமைப்போ இருக்காது. இரு துவாரங்களே காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதே போன்று கிளியோபாட்ரா, மார்க் அண்டனி பற்றிக் காணப்படும் இன்னொரு சிக்கலான பிரச்சனை அவர்கள் காதல் பற்றியது.

கிளியோபாட்ரா, மார்க் அண்டனி காதல் மிக உயர்வானதாகக் கூறப்படுகிறது. மார்க் அண்டனி கிளியோபாட்ராவுக்காக உலகையே பகைத்தான் எனவும் அவன் மரணத்தைத் தொடர்ந்து அவளும் பாம்பைத் தன் மார்பில் கொத்தச் செய்து தற்கொலை செய்து கொண்டாள் எனவும் கூறப்படுகின்றது.

அவர்கள் காதல் பற்றிய இக்கருத்துக்கு எதிர்மாறான கருத்துக்களும் கூறப்படுகின்றன. வரலாற்றிலே மிகவும் வல்லமை மிக்கவளாகவும் பயங்கரமானவளாகவும் இருந்த கிளியோபாட்ரா காமவெறி கொண்ட பெண் எனவும் கூறப்படுகின்றது. இதனாலேயே ஜூலியஸ் சீசர் மற்றும் மார்க அண்டனியை மணந்தாள் என்கின்றனர். ஓர் எழுத்தாளர் இவபை; புராதன உலகின் 'மொனிக்கா லாவின்ஸ்கி' எனக் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமன்றி ஆட்சி வெறி பிடித்தவள் எனவும் இந்த மாவீரர்களை அதற்காக பயன்படுத்தி அரசியல் நோக்கிலேயே காதலித்தாள் எனவும் வாதிடப்படுகின்றது. மார்க் அண்டனி இறந்த போது ஆட்சி அதிகாரமும் அவளை விட்டு விலகியதாலேயே தற்கொலை செய்து கொண்டாள் - காதலால் அல்ல என்றும் கூறப்படுகிறது.

அப்படியானால் ஷேக்ஸ்பியர் இவர்கள் காதலை ஏன் உயர்வாகக் கூற வேண்டும்? என்ற கேள்வி உருவாகின்றதல்லவா? பொதுவாகவே கவிஞர்களும் எழுத்தாளர்களும் காதல் பற்றி மிகைப்படுத்திக் கூறுவNது வழமை. அவர்களுக்கு அவர்களின் படைப்புக் காதாபாத்திரம் நிறைவு பெற வேண்டுமென்பதே குறிக்கோள். குறித்த கதாபாத்திரத்தை அவர்கள் எதற்காக படைத்திருக்கிறார்களோ அந்த நோக்கிலேயே அந்தக் கதாபாத்திரத்தைக் கற்பனையாக வளர்த்துச் செல்வர். அவர்களுக்கு உண்மை தேவையில்லை. அந்த வகையில்தான் ஷேக்ஸ்பியரும் கிளியோபாட்ரா, மார்க் அண்டனியைப் படைத்து வளர்த்துள்ளார் என பதிலளிக்கப்படுகிறது.

இலக்கிய வரலாறுகள் கூறுவது போல இருவரும் உயர்ந்த காதலர்கள் ஆகையால் உடல்களும் ஒன்றாகப் புதைக்கப்பட்டன என்ற செய்திப்படி இரு உடல்களையும் அகழ்வுகள் மூலம் பெற்றால் அவர்கள் காதலை உண்மை என நிரூபிக்க முடியும். இந்த முயற்சியில் தான் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், அகழ்வாராச்சிகள் மூலம் கிளியோபாட்ரா, மார்க் அண்டனி சமாதி கண்டுபிடிக்கப்பட்டு அதில் இரு உடல்கள் ஒன்றாகக் காணப்பட்டு ஒன்றை கிளியோபாட்ராவினது என்பது நிருபிக்கப்படும் பட்சத்தில் அருகில் இருப்பது மார் அண்டனிதான் என்பதை உறுதிப்படுத்த தேவையில்லை. அது நிச்சயமாக மார்க் அண்டனியாகவே இருக்கும்.

ஆனால் உயர்ந்த காதல் அவர்களுக்குள் நிலவியது என்பதை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும்? அன்பின் ஆழத்தை, காதலை அந்த எலும்புக் கூடுகளைக் கொண்டு எவ்வாறு நிருபிக்க முடியும்? ஏதோவொரு காரணத்தால் அவையிரண்டும் ஒன்றாகப் புதைக்கப்பட்டிருக்கலாம். அதைக் கொண்டு இலக்கியங்கள் உயர்வான காதலாக மிகைப்படுத்திக் கூறியிருக்கலாம் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

இந்த வாதமும் சரியானதாகத் தோன்றுகிறதா? இந்தச் சிக்கல்களுக்கே விடை தெரியாத நிலையில் இவ்விரண்டையும் இணைத்து மூன்றாவது புதிய பிரச்சனை உருவாக்கப்படுகின்றது.

காதலில் அழகு முதன்மையற்றது என்பதை இவர்கள் காதல் நிருபிக்கின்றதா என்பதுதான் கேள்வி. இந்த உலகில் ஐஸ்வர்யா ராஜூம் அபிஷேக் பச்சனும் மட்டும் காதலிக்கவில்லை என்பதே இதற்குப் போதுமான பதில்.

ஆனால், நாணயங்களில் உள்ளவாறு கிளியோபாட்ராவும் மார்க் அண்டனியும் அழகற்றவர்கள் என்பதும் இலக்கியங்கள் கூறுவது போல அவர்கள் காதல் உயர்வானது என்பதும் அகழ்வாராச்சிகள் மூலம் நிருபிக்கப்படின் காதலின் மகத்துவம் வரலாற்றிலேயே அதிகரிக்கும் என்பது நிச்சயம்.

வரலாற்றில் நிலைத்த ஜோடியின் மூலம் காதலின் மகத்துவத்தை நிலைநாட்டவும், அந்த ஜோடி பற்றிய கேள்விகள், அவர்கள் மரணத்தின் பின்னாலுள்ள மர்மம் என்பவற்றை அறியவும் 2039 வருடங்கள் காத்திருந்த உலகம் இன்னமும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பதும் காத்திருந்தாலும் காதலின் மகத்துவம் நிலை நாட்டப்படுமா? என்பதும் தெரியவில்லை.