வெள்ளி, 3 ஜூலை, 2009

கடல் கடந்த தேசத்தில் கண்திருஸ்டி பூதமாய்!!



இணையதளத்தில் நீங்கள் தரவேற்றம் செய்த உங்கள் புகைப்படம் கடல் கடந்த நாடொன்றில் விளம்பரப் பதாதையாக இருந்தால்.... சீ அப்படி இருக்காது. விளம்பரத்திற்காக போஸ் கொடுக்க பிரபல நட்சத்திரங்களும் மாடல்களும் இருக்கும் போது யார் இதையெல்லாம் விளம்பரமாகப் பயன்படுத்தப் போகிறார்கள் என்று கேட்கிறீர்களா?


சில காலம் முன்னர் டானிலே – ஜெப் சிமித் தம்பதியினரும் உங்களைப் போலதான் அலட்சியமாகப் பதில் சொல்லியிருப்பார்கள். ஆனால் இன்று அவர்களால் இதை அலட்சியப்படுத்தவே முடியாது.


அமெரிக்க சென் லூஸிஸை அண்டிய பகுதியில் வாழும் இவர்கள் குடும்பப்புகைப்படம் ஐரோப்பிய கண்டத்திலுள்ள செக் குடியரசின் தலைநகரான பராக்கில் ஆளுயர விளம்பரப் பதாதையாக உள்ளது. இத்தாலிய உணவுகளை இறக்குமதி செய்யும் கடையொன்றின் விநியோகச் சேவைக்கான விளம்பரமாகவே இவர்களின் குடும்பப்புகைப்படம் பயன்பட்டிருக்கிறது.


சேக் தலைநகரிற்கு சென்றிருந்த இவர்களின் நண்பரொருவர், ஒரு சுப்பர் மார்கெட் தொகுதியில் ஆளுயர விளம்பரமாக சிரித்தபடி இருந்த டானிலேயின் குடும்பத்தின் புகைப்படத்தைப் பார்த்துள்ளார். உடனேயே அந்நண்பர் டானிலே குடும்பத்தினருக்குத் தெரிவித்ததுடன் கடை உரிமையாளருக்கும் அறிவித்துள்ளார்.அனுமதியின்றி இப்புகைப்படத்தை விளம்பரமாக்கி கடை உரிமையாளரோ, “இது உண்மையான ஒரு குடும்பமெனத் தெரியாது. கம்பியூட்ரில் போலியாக உருவாக்கப்பட்ட குடும்பப்படம் என்றுதான் நினைத்தேன். அது உண்மையான குடும்பம் என்று தெரிந்தவுடனேயே அந்த விளம்பர பதாதையை அகற்ற நடவடிக்கை எடுத்துவிட்டேன். அந்த குடும்பத்துக்கும் மிகுந்த மகிழ்ச்சியுடன் மன்னிப்புக் கோரி மின்னஞ்சல் அனுப்பப் போகிறேன்.” என்று அமைதியாகவே பதிலளித்து விட்டார்.


இந்தப் புகைப்படம் திருமதி.சிமித்தால், அவரின் நத்தார் வாழ்த்து மடலாக வடிவமைக்கப்பட்டு ஓர் இணையத்தளத்தில் தரவேற்றப்பட்டிருந்தது. இந்தப் புகைப்படம் விளம்பரப் பதாதையாக, கடல் தாண்டி… கண்டம் தாண்டி… உலகின் ஒரு பகுதியில் இருக்கும் செய்தி தெரிந்த பின்னே இவர்கள்; இணையத்தளத்தில் புகைப்படத்தைத் தரவேற்றம் செய்வது தொடர்பில் எச்சரிக்கையடைந்துள்ளனர்.


ஆனால் விளம்பரமாய் செக் குடியரசில் பிரபலமானது மட்டுமன்றி, இந்தச் செய்தி மூலம் உல

கின் பல நாடுகளிலுமுள்ள மக்களுக்கு அறிமுகமாகிவிட்டார்கள்.


இணையத்தில் புகைப்படத்தைப் தரவேற்றுவது தொடர்பாக பல தரப்புகளிலிருந்தும் எச்சரிக்கைகள் வருகின்ற போதிலும் அவற்றை அலட்சியம் செய்வது போல இந்த சம்பவத்தையும் வாசித்துவிட்டு மறக்கப் போகிறீர்களா? இல்லை நாமும் உலகின் ஏதோ ஒரு நாட்டில் விளம்பர மாடலாக இருப்பேன் என்று கனவு காணப் போகிறீங்களா….? எதுவாயினும் அது உங்க இஷ்டம்.


ஆனாலும் ஒரு நிமிடம்! உங்க புகைப்படம் உணவு விநியோகச் சேவை விளம்பரத்துக்கு மட்டும்தான் பயன்படும் என்று சொல்ல முடியாது. இவ்வளவு ஏன் விளம்பரமாகத்தான் பயன்படும் என்றும் சொல்ல முடியாது. வீட்டு வாசலில் கண்திருஷ்டி பூதத்தின் படத்துக்குப் பதிலாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.


அதுக்கென்ன கடல் கடந்த ஏதோ ஒரு தேசத்தில்தானே கோமாளியாகப் போகிறோம்!!