வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

“பூமியே என் வீடு… வானமே என் கூரை…”

நானும் கனவு காணுறன்!”


நானும் கனவு காண்றன்! எனக்கு நிறைய ஆசைகளும் இருக்கு! முதல்ல என்னோட ஓவியங்களுக்கு ஒரு காட்சியறை அமைக்கனும். ஏன்னா என்னோட திறமையை வெளிக்காட்டுறதும், எனக்கு வாழ்வாதாரமாவும் இருக்கிற இந்த ஓவியங்களை காட்சிப்படுத்தி விக்க சரியான இடமொன்றில்லை. அப்படி ஒரு இடம் கிடைச்ச பிறகு, அங்க இருந்து இன்னமும் நிறைய ஓவியங்கள் தீட்டனும். அதை வித்து பிரபல ஓவியராய் வாரதோட வாழ்க்கையிலம் நல்லதொரு நிலைக்கு வரணும். இதெல்லாம் நடக்குமா? என்று கூட தெரியலை. ஆனா எல்லாரையும் போலவே நானும் முன்னேறனும் என்று ஆசைப்படுறன்.” இப்படி ஆசைகள், இலட்சியங்கள், கனவுகள் என வாழும் நிர்மலா ஹேரத்தை ஒரு தெருவோர ஓவியர் என்று சொல்லலாம்.
இவரை எவ்வாறு சரியாக அறிமுகப்படுத்த முடியும் என்பது எனக்கு தெரியவில்லை.

நிர்மலாவை நான் சந்திக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது இவரின் ஓவியகாட்சிக் கூடம் அமைந்துள்ள இடமே. வானமே கூரையாக, பூமியே தரையாக அமைந்தள்ள இவரின் கடைக்கு இவரின் கலையைப் போலவே எல்லைகள் ஏதுமில்லை. ‘விகாரமாதேவிப் பூங்கா கொழும்பின் பிரபலமான இடங்களில் ஒன்று. இதன் ஒரு பக்க வீதியோரம் முழுவதுமே வண்ண வண்ண ஓவியங்களை நான் அவ்வீதியை கடந்து செல்லும் சந்தர்ப்பங்களில் கண்டிருக்கிறேன். நிர்மலா போலவே பலர் அந்ந பாதையேரத்தில் ஓவியங்களுடன் காத்திருப்பதையும், ஓவியங்களை தீட்டுவதில் உலகையே மறந்திருப்பதையும் கண்டிருக்கிறேன்.

ஆனால், அந்த பாதையைக் கடக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு ஓவியத்தையும் வியப்போடு பார்ப்பதோடு, “நிதானமாய் பார்த்து ரசிக்கக் கூட நேரமில்லையே. இன்னொரு நாளைக்கு கட்டாயம் வந்து பாக்கணும்.” என்று நினைத்துக் கொண்டு போவதோடு என் வேலை முடிந்து விடும். மறுபடி அப்பாதையைக் கடக்கும் வரை அதைப் பற்றி நினைக்கவே சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. ஏறத்தாழ 2 வருடங்களுக்கு பிறகே அதை இரசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது.

அந்த ஓவியங்களை பார்க்கிற போது ரொம்ப திறமையான, ஓவியக்கலை பற்றி முழு ஞானம் பெற்ற ஓவியர்களால் வரையப்பட்ட ஓவியங்கள் போலவே இருக்கும். “இதுக்கெல்லாம் பெரிய பெரிய ஓவியர்களிட்ட பயிற்சி எடுத்திருப்பாங்க” என்றெல்லாம் நினைச்சிருக்கன். ஆனா நிர்மலா கூட பேசின அந்தக் கொஞ்ச நேரத்தில ‘படிப்பதனால் அறிவு பெற்றோர் 1000 உண்டு. பாடம் படிக்காத மேதைகளும் பாரினிலுண்டு’ என்கிறதை புரிஞ்சுகிட்டன்.

முதல்ல நான் நிர்மலாகிட்ட கேட்டதுநீங்க எங்க, யார் கிட்ட இவ்வளவு அழகாக வரையக் கத்துக்கிட்டீங்க?” என்கிறது தான். அழாக வெக்கப்பட்டு சிரிச்சாங்க. பிறகு, “நான் இதுவரை ஓவியம் பத்தின அடிப்படை கூட நான் படிச்சது இல்லை. நானா கீறி பழகினது தான். உண்மையான ஆர்வம் இருந்தா எல்லாம் தானா வரும். இதுக்கெல்லாம் கூடவா படிக்கனும்?” என்று திருப்பிக் கேட்டாங்க.

சித்திரமும் கைப் பழக்கம். செந்தமிழும் நாப் பழக்கம்என்கிறது நான்கேள்விப்பட்டிருக்கன். ஆனாலும் ஒரு சின்னச் சந்தேகம்…. இவங்க பரம்பரையிலயாராவது ஓவியரா இருப்பாங்களோ? இல்லைப் பள்ளிக் கூடத்தில படிச்சிருப்பாங்களோ? அதைக் கேட்ட போது மறுபடியும் அழகாச்சிரிச்சாங்க.

நான் அதிகமாக படிக்கலை. அப்படி படிச்சிருந்தா நல்ல ஒரு இடத்தில வேலை செய்திட்டிருப்பன். எனக்குத் தெரிஞ்ச ஒரே வேலை இது தான். ஆனா இதை நான் பள்ளிக்கூடத்தில படிச்சதும் கிடையாது. என் பரம்பரையில யாரும் ஓவியம் வரைஞ்சதும் கிடையாது. முதல்ல வரையத் தொடங்கினதே நான் தான். என்னால வரையை முடியும் என்கிறதை நான் கண்டுபிடிச்சதும் அதையே என்னோட வருமாத்துக்கு வழியாக்கினதும் ஒரு வித்தியாசமான சம்பவம். இப்ப உங்க சந்தேகம் தீந்திடிச்சா?” என்று கேட்டப்ப எனக்கு வேறொரு ஆசை வந்தது.இவ்வளவு சொன்ன நிர்மலா, ஏன் அந்த வித்தியாசமான சம்பவம் என்னென்னு சொல்லல்லை? அது என்னவாயிருக்கும்? இருக்கிற கொஞ்ச மூளையைப் போட்டுக் குடைய முடியாம என் சந்தேகத்தைக் கேட்டேன்.

அது சொல்ல கூடதா இரகசியமில்ல. ‘சிலுமினஎன்கிற பத்திரிகை ஒரு ஓவியப் போட்டி வைச்சது. ஏதோ எனக்கும் கலந்துக்கணும் என்கிற ஆசை வந்திச்சு. ஓரு அழகான இயற்கைக் காட்சியை ஒரு படத்தைப் பாத்து வரைஞ்சேன். வரைஞ்சு முடிஞ்சு பார்த்தப்ப எனக்கே அதிசயமாவும் ஆச்சர்யமாவும் இருந்திச்சு. அவ்வளவு அழகாக வந்திருந்திச்சு. அப்பதான் இதை ஏன் அந்தப் போட்டிக்கு அனுப்பனும். பரிசு கிடைக்கலாம் கிடக்காமலும் போகலாம். இதை வித்தா எனக்கு கண்டிப்பா ஒரு வருமானம் கிடைக்கும் என்று தோணிச்சு. அதை வித்தப்ப எனக்கு லாபம் கிடைச்சிச்சு. எனக்கும் ஒரு வருமானம் வேணுமில்ல? அதனால இதையே என்னோட தொழிலா ஏத்துக்கிட்டன். கிழமையில ஐஞ்சு நாளும் வீட்டை இருந்து ஓவியங்கள வரைவன். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில இங்க கொண்டு வந்து விப்பன். அந்த நாளில காலையில 7 மணியில இருந்து பின்னேரம் 6 மணிவரைக்கும் இங்க தான் இருப்பன். வெளிநாட்டுக்காரங்க தான் அநேகமா வாங்குவாங்க. படத்தின்ற அளவைப் பொறுத்து ஒவ்வொரு படமும் 1000 ரூபால இருந்து 6000 ரூபா வரையில விக்க முடியும். இதே கடையில வைச்சு வித்தா 10000க்கு விக்கலாம். எல்லாமே இருக்கிற இடத்துக்கு தானே மதிப்பு? ஆனா இப்ப எனக்கு பாத்து வரையனும் என்கிறதில்லை, கற்பனையிலயே வரைய முடியும்.” ஒரு நீண்ட விளக்கத்தை தந்து முடிச்சாங்க.

அப்படி இருந்து என் சந்தேகங்கள் தீந்தபாடில்ல. பொதுவா எல்லா இடத்திலயுமே பெண்களுக்கு பாலியல் ரீதியான பிரச்சனைகள். ‘தென்னாலிகமல் பாணியில சொன்னா, ஒரு பெண், தனியா பஸ்ஸில போறது பிரச்சனை, வேலைக்கு போன வேலை செய்யிற இடங்களில பிரச்சனை, சில இடங்களில வீட்டுக்குள்ளேயே பிரச்சனை. அங்க, இங்க எல்லா இடத்திலயுமே பிரச்சனைகள் தான். அப்படி இருக்கும் போது நிர்மலாவோ தனியா, ஒரு கிழமையில முழுசா 2 நாள் வீதியோரத்தில இருக்கங்களே! “இதுவரைக்கு எந்தப் பிரச்சனையும் வந்ததில்லையா?” என்று ரொம்பவே ஆவலாகக் கேட்டேன். “பிரச்சனை என்று சொல்லுற அளவுக்கு எதுவுமே வந்ததில்லை. இங்க இருக்கிறவங்க எல்லாமே என் கூடப் பிறக்காத சகோதரங்கள் தான். ஏதாவது பிரச்சனை வந்த உதவிக்கு வந்திடுவாங்க. வேலை வெட்டி இல்லாம, அம்மா அப்பா சொத்த வீணாக்கிட்டு தறுதலையா திரிவாங்களே அந்த மாதிரியானங்க இதால போறப்ப வாரப்ப ஏதாவது சொல்லுவாங்க. நான் அதைக் காதில போட்டுகிறதே இல்ல.”

நிர்மலா மேல கொஞ்சம் பொறாமை வந்தது. “அப்படின்னா ரொம்ப சந்தோஷமா இருக்கிறீங்களா? உங்களுக்கு எந்தப் பிரச்சனையுமே கிடையாதா?” கேட்டப்ப, “இந்த பாதை அடிக்கடி மூடப்படும். அந்த நேரங்களில போட்டதை போட்படி விட்டிட்டு போகணும். எதுவும் களவு போகாது. ஆனாலும் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.” அப்படின்னு தொடங்கியதை பாதியில விட்டிட்டுஆனாலும் அதொன்னும் பெரிய பிரச்சனை இல்லை.” என்று முடிச்சிட்டாங்க.

விசயம் என்னங்கிறது கொழும்பின் நிலை தெரிஞ்ச எல்லாருக்குமே தெரிஞ்சது தான். ஆனாலும் அனைவருமே காந்தி கற்றுத் தந்த மூன்று குரங்குகளில் ஒன்றாகத் தான் வாழ வேண்டிய நிலையில் வாழ்கிறார்கள். அதுக்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ன? மறு கேள்வி கேட்காமல்ஓவியம் பற்றிச் சொன்னதற்கு நன்றிசொல்லிட்டு திரும்பிப் பாக்காம இடத்தை காலி பண்ணினேன்.

1 கருத்து:

த.அகிலன் சொன்னது…

நல்ல பதிவுதான்.. அந்த ஓவியரின். ஏதாவது ஒரு ஓவியத்தையாது இங்கே பார்வைக்கு நீங்கள் புகைப்பட மெடுத்திருக்கலாம்.. படத்தில் பக்கவாட்டாக இருப்பதால் பார்க்க முடியவில்லை சரியா.. ம்.. நானும் அந்தக்குரங்கள்ள ஒண்டுதானே அதால நானும் பின்னூட்டம் போட்டிட்டு போறன் பேசாம.. ம்..