ஞாயிறு, 3 மே, 2009

"வயித்த நிரப்பவே வருமானமில்ல - கல்வி வேறயா?"



“அம்மாதான் வேலைக்குப் போறாங்க. றால் பண்ணையில வண்டெடுக்கப் போவாங்க, மீன் திரிக்கப் (கடலிருந்து பிடித்து வரப்பட்ட மீன்களை வகை பிரித்தல்) போவாங்க, உப்பு சுமக்க போவாங்க, சிப்பி பொறுக்கப் போவாங்க.. அதில வார காசு சாப்பாட்டுக்கே பத்தாது. இதுல எப்பிடி ஸ்கூல் போறது? இருந்தாலும் கொஞ்சக் காலம் போனன். அதுக்கப்புறம் முடியல, நின்னிட்டன்.” வாழ்வில் சந்தித்த வேதனைகளால் முதிர்ச்சியடைந்து பேசும் மாறனுக்கு வெறும் பன்னிரண்டு வயதுதான்.


இந்தச் சின்ன வயதிலேயே அவன் அனுபவித்த வறுமையும் கஷ்டங்களும் அவன் பேச்சிலேயே வெளிப் பட்டன. அவனை நான் சந்தித்தது புத்தளத்திலுள்ள உடப்பு என்ற கிராமத்தின் ஒரு பிரதேசமான தாணந் துறை என்ற இடத்திலே. ஆறாம் தரத்தில் படிக்க வேண்டிய அவனுக்கு அரிவரி கூட சரியாத் தெரியாதாம். கட்டாய, இலவசக் கல்வியை கொண்ட என் நாட்டிலே இப்படி ஒருவனா? இது எப்படிச் சாத்தியமாயிற்று? என்ற திகைப்பும் ஆச்சர்யமும் என்னுள் எழுந்தன. மேலும் அவனுடன் பேசிய போது நெஞ்சைக் கரைய வைக்கும் அவனின் துன்பகரமான வாழ்க்கை தெரிய வந்தது.


“அப்பா உன்னைப் படிக்க வைக்க மாட்டாரா?” - இதை சகஜமாகத் தான் அவனிடம் கேட்டேன். அதிக பட்சமாய் நான் எதிர்பார்த்த பதில் “அவர் ஒரு குடிகாரர்.” என்பது தான். “அப்பாவா? நான் பிறந்தப்பவே அவன் ஓடிப் போயிட்டான். இதுவரைக்கும் நான் அவனோட முகத்தைக் கூட பார்த்ததேயில்ல.” இந்தப் பதில் அவனின் பிஞ்சு உள்ளத்திலே ஏற்பட்டிருந்த தாக்கத்தையும் காயத்தையுமே பிரதி பலிப்பதாக எனக்குத் தோன்றியது.


“அப்படின்னா அம்மா மட்டும் தான் உன் கூட இருக்கங்களா? அம்மா வேலைக்கு போன பிறகு என்ன செய்வ?” என்று கேட்டேன். “பாட்டி, சித்திமார் எல்லாம் ஒன்னாத் தான் இருக்கோம். அம்மா வேலைக்குப் போன பிற்பாடு; சித்திகளோடயும் பக்கத்து வீட்டில இருக்கிற பிள்ளைகளோடயும் சேந்து ‘கிறிக்கட்’, ‘கரம்’ விளையாடுவன். இதானால ஸ்கூல் போகாதது பெரிய பாதிப்பா தெரியலை” என்றான்.


இந்தப் பதில்கள் எனக்குள் இரண்டு தேடல்களை ஏற்படுத்திற்று. ஒன்று அவன் குடும்பம் பற்றியது. மற்றறையதை பின்னால் சொல்கிறேன்.


மாறனின் குடும்பத்தைப் பற்றி அயலில் விசாரித்தேன். “மாறன் எனக்கு பேரன் முறைதான். என்னோட அக்காட மகளின்ற பெடியன் தான். எங்க அக்காவுக்கு ஐஞ்சு பொம்பிளப் பிள்ளைகள். புருசன் காலமாயிட்டார். மூத்தவளுக்கு 32 வயசு, இரண்டாவது மகளுக்க 22 வயசு, மூன்றாவதுக்கு 14 வயசு, நாலாவதுக்கு 12 வயசு, கடைசிக்கு 9 வயசு. இதில மூத்தவளின்ற பெடியன்தான் மாறன்..கட்டினவன் இந்த பெடியன் பிறந்ததுமே விட்டிட்டு போயிட்டான். எல்லா பிள்ளைகளுமே சின்னதா இருக்கிறதால தாயும் மூத்த இரண்டு பெட்டைகளும் தான் ஏதோ கிடைக்கிற வேலையைச் செய்து வயித்தைக் கழுவிட்டு இருக்குறாங்க. இந்தக் குடும்பத்துக்கு சமுத்தியில மாசம் தொளாயிரம் ரூபாதான் கிடைக்கும். வீடு வாசலும் கிடையாது. என்ட காணியிலதான் ஒரு துண்டு குடுத்து இப்ப அதில கொட்டில் போட்டு இருக்கிறாங்க.” என்றார் ஒரு பெண்மணி. அந்தக் குடும்பத்தின் நிலை தெரிந்துவிட்டது.


மாறனின் படிப்புக்கு வறுமை தடையா இருக்கலாம். அதே வறுமையாலஅவனோட சின்னச் சித்திமாரும் பள்ளிக்குப் போகாம இருக்கலாம். ஆனால்பக்கத்து வீட்டுப் பிள்ளைகளோட விளையாடுவதாய்ச் சொன்னானே. அது எப்படிச் சாத்தியம்?


அந்த ஊரில் படித்த ஒரு பெரியவரிடம் கேட்டேன். “எங்க ஊரில இந்தப் பகுதி ஒரு ஒதுக்கப்பட்ட பகுதியாத்தான் இருக்கு. இவங்களுக்கு படிப்பறிவு மிகக் குறைவு. படிக்கவும் இவங்க பெரிசா ஆர்வம் காட்றதில்லை. வறுமையும் இவங்கள பள்ளிக்கு போகவிடறதில்லை. குறிப்பிட்ட காலத்திலயே கடல் தொழிலுக்கும் அதோட சம்மந்தமான தொழில்களுக்கும் போயிடுவாங்க. அதுவே போதும் என்று நினைக்கிறாங்க. இருந்தாலும் இப்ப சில இளைஞர்கள் தாங்கள் முன்னுக்கு வாரதோட இவங்களுக்கும் விழிப் புணர்ச்சியை ஏற்படுத்த முயற்சி செய்யிறாங்க.” என்று தெரிவித்தார்.


அண்ணளவாக 200 குடும்பங்கள் அந்த பிரதேசத் தில இருக்கின்றன. அநேகமானகுடும்பங்களில் இதே நிலைதான். அநேகமானோர் 4ஆம் தரத்தைதாண்டியிருக்கவில்லை. ஒரு சிலர் 10ஆவது வரை படிச்சிருந்தாலும் அதற்குரியஅறிவற்றவர் களாகவே இருந்தனர். இவர்களுக்கு கல்விக்குரிய பொருளாதாரவசதிகள் குறைவென்பது உண்மை தான்.


இருப்பினும் அதை விட தாக்கம் செலுத்தும் காரணம் ஒன்றுமிருக்கிறது. கல்வி பற்றிய அக்கறை இப்பகுதி மக்களிடம் இருக்கவில்லை என்பதுதான் அது. அந்தப் பகுதியில் வேலைக்குப் போகும் 25 வயதுப் பெண்ணொருவர், “படிக்கனும் என்ற எண்ணம் எனக்கு வரல்ல. அது பற்றி வழிகாட்டல்களும் எனக்கு இருக்கலை. அதோட ஆம்பிளைகள் கடல் தொழிலுக்கு போவாங்க, நாங்க திரிக்க போவம். அப்படி போனா எங்க செலவுக்குப் பணம் கிடைக்கும். இதானால படிக்கணும் என்கிறது முக்கியமா தோணலை. ஆனால் இப்ப இப்ப இந்தப் பக்கத்தில போடுற ‘விழிப்புணர்வு’ நாடங்களைப் பார்த்துப் பிள்ளைகளை ஒரு சிலர் படிக்க வைக்கிறாங்க. ஆனாலும் பணவசதி கொறவா இருக்கிறதால பெரிசா படிக்க வைக்க முடியிறேல்ல.” என்றார்.


அந்தச் சமூகத்தின் ஓரளவு மாற்றத்துக்கு சாட்சி மாறனின் மூன்றாவது சித்தி. இப்ப ஏழாம் தரத்தில படிக்கிறாங்க. குடும்பத்தில ஒருத்தராவது படிச்சிருக்கணும் என்கிறதுக்காக படிக்கிறார். ஆனாலும் இச்சமூகம் நிறையவே முன்னேற்றமும் விழிப்புணர்வு அடைய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஒவ்வொருவரும் கண்டிப்பா அதைப் பெறணும். சமூக ஆர்வலர்களுக்கும், விழிப்பணர்ச்சி ஏற்படுத்தும் குழுக்கள் மட்டுமன்றி இலங்கையர் அனைவருக்குமே இது ஒரு சவால் தான்.


“செவிக்கு உணவு இல்லாத போழ்து
சிறிது வயிற்றுக்கும்"
- வள்ளுவர்

கருத்துகள் இல்லை: