வெள்ளி, 12 மார்ச், 2010

மாலையிடும் மங்கையரே ஒரு நிமிடம்……!

மாவிலை தோரணம்… கண் கவர் கோலம்… பூரண நிறைகுடம்… என மங்களகரமாகத்தான் நமது கலாசார நிகழ்வுகள் நடைபெறுகின்றன. பாடசாலை நிகழ்ச்சிகள் முதல் பொது நிகழ்வுகள் வரை அத்தனையும் இப்படித்தான் தமிழ்க் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் நடைபெறுகின்றன. அத்துடன் பட்டுப் புடைவைகள் சரசரக்க பன்னீர் தெளித்து வரவேற்கும் பெண்கள்… தமிழர் பண்பாட்டிற்கேற்ப விருந்தினரை வரவேற்கும் குலமகளிர்! இப்படி தமிழனின் தனித்துவம், கலாசாரம் இன்றும் வாழ்ந்து கொண்டே இருக்கின்றன. மேற்கத்தைய மோகத்தில் தமிழன் மூழ்கினாலும் இவ்வாறான நிகழ்வுகளினூடாக கலாசாரத்தை அழித்து போகவிடாமல் பாதுகாத்துக் கொண்டே இருக்கின்றான்.


ஆனால் இன்று இந்த நிகழ்வுகளிலெல்லாம் புதிய கலாசாரம் புகுத்தப்படுகிறது. இப்புதுமை கலாசார மீறலாகவே உள்ளது. இந்நிகழ்வுக்கு வரும் விருந்தினர்கள் மாலையிட்டு வரவேற்கப்படுகின்றனர். அதுவும் மாணவிகளாலும், பெண்களாலும் வரும் விருந்தினர்களுக்கு மாலையிடப்படுகிறது. முன்னைய காலங்களில் அதிதியாக வருபவரக்கு மலர்க்கொத்து வழங்கி வரவேற்பார்கள்… அந்த அதிதியுடன் அவரின் பாரியார் வருவாராயின் சில சமயம் அவருக்கு பெண்கள் மாலையிட்டு வரவேற்பர். ஆனால் இன்று சில இடங்களில் வரும் அதிதிக்கே மாலையிடப்படுகிறது.

‘மாலையிடல்’ என்ற சொல் தமிழருக்கு நினைவூட்டுவது திருமணத்தைத் தானே நமது புராணங்கள் தொட்டு இன்றுவரை ஓர் பெண் ஆடவன் ஒருவனுக்கு மாலையிட்டிருப்பின் அது அவளுக்கு கணவன்தானே! சுயம்வரத்தில் மாலையிடுபவன் அவள் மணாளனே. அதுமட்டுமன்றி தாலியற்ற கந்தர்வ திருமணங்கள் கூட மாலை மாற்றலுடன் மட்டும்தானே இடம்பெற்றன. அதெல்லாம் புராணகாலம், இது நவீன யுகம் என்று சொல்லப் போகிறிர்களா?

மாலை மட்டும் மாற்றிக் கொண்டாலே திருமணம்தான் என்று அண்மையில் இந்திய நீதிமன்றமொன்று தீர்ப்பளித்திருந்தது. தமிழ் என்றதுமே நினைவுக்கு வரக் கூடிய சங்கத் தமிழ் வளர்த்த மதுரை உயர் நீதிமன்றம்தான் இந்தத் தீர்ப்பை வழங்கியிருந்தது. மாலை மட்டும் மாற்றி விட்டு தன் இச்சைகள் தீர்ந்த பின் ‘தாலி கட்டவில்லை, இவள் மனைவியல்ல’ என்று ஒர் பெண்ணின் வாழ்வைச் சீரழிக்க முயன்ற கயவனுக்கே மதுரை உயர் நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியிருந்தது. மாலை மட்டும் மாற்றினாலும் திருமணம்தான்! என்றே முடிவு சொன்னது.

ஏனெனில் தமிழ் பெண்ணால் முதன்முறையாக ஆடவன் ஒருவனுக்கு மாலையிடப்படுவது திருமணநாளில்தான். அது ‘மாலை மாற்றல்’ எனும் நிகழ்விலேயே. இது ‘உடலாலும் உள்ளத்தாலும் இருவரும் ஒருவர்’ என்ற தத்துவத்தை உணர்த்துவது. அவ்வாறு மாலையிடுபவனே அவனது வாழ்நாள் துணைவன். அத்தகைய புனிதமாகக் கருதப்படும் மாலையை மாற்றானுக்கு இடத்தான் வேண்டுமா?

இது மேலைத்தேய கலாசாரமும் கிடையாது. நமக்கான கலாசாரமும் கிடையாது. இடை காலத்தில் சிலர் தோற்றுவித்து விடும் புதிய கலாசாரமே! இதனை மாற்றம் என்று கூறி அங்கீகரிப்பதற்கு இதனால் ஏற்படக் கூடிய நன்மையேதும் கிடையாதென்றே நினைக்கிறேன். ஆனால் மருவென கருதி தவிர்த்தால் சிறப்பாகும். ஏனெனில் இது மேலைத்தேய கலாசாரம் இல்லையென்ற நிலையில் பிறகலாசாரத்தைக் கொண்ட மக்களின் மனதினில் இதுதான் தமிழர் கலாசாரம் போலும் என்ற தவறான எண்ணக்கரு உருவாகிவிடும்.



கலாசாரம் எதற்கு? மாலையிட்டால் தவறென்ன? இதனால் கற்பா போய்விடும் என்று கேட்கக் கூடியவர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். மாலையிடுவது தவறா சரியா என்பதை விட அவசியமா? அதனால் நன்மை ஏதேனும் உள்ளதா? என்ற கேள்விகளைக் கேட்டுப் பாருங்கள். அவசியம் கிடையாது, ஒரு மலர்க் கொத்தை வழங்கியே விருந்தினரை வரவேற்க முடியும். “மாலையிட்டால்தான் வருவேன்” என்று எந்த அதிதியும் அடம்பிடிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். இதனால் நன்மையோ பயனோ ஏதும் கிடைக்க போவதாகவும் தெரியவில்லை.

எனவே, நமக்கு நன்மையோ பயனோ ஏற்படாத ஒன்றைச் செய்து கலாசாரத்தைச் சிதைக்காமல், அதையாவது வாழ விடலாமே! ஓவ்வொரு மனிதனுக்குமான தனித்துவ அடையாளம் அதுதானே!!

4 கருத்துகள்:

Krishna சொன்னது…

வாசிக்க முடியாமல் உள்ளது.....

இலக்கியா சொன்னது…

உங்கள் கணனியில் பாமினி (bamini) மொழி இருந்தால் வாசிக்கலாம் என்று நினைக்கிறேன்.

ரோஸ்விக் சொன்னது…

எனக்கும் வாசிக்க முடியவில்லை.

எல்லோர் கணினியிலும் பாமினி எழுத்துருவை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. முடிந்தால் உங்களது அமைப்பை மாற்றலாமே. :-)

புரிதலுக்கு நன்றி.

kindly remove this comment word verification also.

இலக்கியா சொன்னது…

உங்கள் கருத்துக்கு நன்றி. இனிவரும் காலங்களில் தவறை திருத்திக் கொள்ள முயற்சிகிறேன்,