வெள்ளி, 6 நவம்பர், 2009

ஐயா ஆச்சார சீலர்


அன்றொருநாள் மாலை வேளை, பஸ்ஸில் சனக்கூட்டமும் அவ்வளவாக இல்லை. என் முன் சீட்டில் இருந்த இருவரும் கதைத்துக் கொண்டிருந்ததில் ஒரு பெயர் மட்டும் தெளிவாகக் கேட்டது. அந்த பெயரைக் கேட்டதும் மிகுந்த ஆவலுடன் அவர்களின் பேச்சை ஒட்டுக் கேட்க முயன்றேன்.

ஏனென்றால் அந்த பெயருக்கு சொந்தக்காரர் மக்களிடையே மிகுந்த மரியாதைக்குரியவர். செல்வந்தர். தர்மவான். ஆச்சாரசீலர். அடிக்கடி உள்ளூரிலும் வெளியூரிலும் தான தர்மங்களை வழங்குபவர். அதையெல்லாம் விட அவர் மேல் எனக்கு பட்டு ஏற்படக் காரணம், அவர் வீட்டு வேலைக்காரன் என்ற வகையில் விசேட சலுகைகள், மரியாதைகள், சில லாபங்கள் எனக்கு கிடைப்பதே. சுருக்கமாக கூறுவதென்றால் ஐயா தெய்வமென்றால், நான் பூசாரி. அதாவது உண்டியல் காசு ஐயாவுக்கு. தட்சணை காசு எனக்கு.

இதையெல்லாம் மனதில் வைத்து அய்யாவை பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று கேட்க முயன்றேன். தகரடப்பா போலிருந்த அந்த பஸ்ஸின் இரைச்சலிலும் பகீரத பிரயத்தனம் செய்து அவர்கள் பேச்சை ஒட்டுக் கேட்டேன். " உயர்ந்த மனிதர்... புலாலை கையாலும் தொடாத பக்திமான்... மது மாது எதையும் வீட்டுக்குள் அனுமதிக்காத ஆச்சாரசீலர். இதுதான் அவர்கள் புகழாரப் பேச்சின் சாராம்சம்.

அவர்கள் பேச்சை கேட்ட பின்னர் ஐயா பற்றி நினைத்துப் பார்த்தேன். அவர்கள் சொன்னதெல்லாம் உண்மைதான். ஐயா உயர்ந்த மனிதர்தான். ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் போல ஆறடி உயரமிருப்பார். புலால் உன்னவு மட்டுமல்ல எந்த உணவையும் கையால் தொடுவதில்லை. கரண்டியும் முள்ளுக் கரண்டியும் வைத்துதான் சாப்பிடுவார். மதுவோ மாதுவோ எல்லாமே நட்சத்திர ஹோட்டல்களில் மட்டும்தான். வீட்டிற்குள் எதையுமே எடுத்து வருவதில்லை. இவ்வளவு ஏன்... எந்த தாசியுடன் இரவுகளில் தங்கிவிட்டு அதிகாலையில் வீடு வந்தாலும் ஸ்நானம் பண்ணாமல் வீட்டுக்குள் நுழைவதே இல்லை. அது மார்கழி குளிர்காலமென்றாலும் கூடத்தான்.

ஐயாவின் சிறப்பு எனக்கு புரியுது. அனால் ஐயாவின் பொண்டாடிக்கு ஏன் இது புரியவில்லை? வீட்டிக்கு போனதும் முதல் விலையாக அவங்களுக்கு இதையெல்லாம் புரிய வைக்க வேண்டும்.

எதையென்று கேட்கிறீங்களா? என்னோட ஐயா ஆச்சார சீலர் என்பதைத்தான்!

கருத்துகள் இல்லை: